Saturday , April 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  என்ன நடந்தது? – உண்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று பரணகம வலியுறுத்து 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு  என்ன நடந்தது? – உண்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று பரணகம வலியுறுத்து 

“காணாமல்போயிருப்போர் எமது நாட்டின் பிரஜைகள். எனவே, காணாமல்போனோருக்கு என்ன நடந்தது?  அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்பது தொடர்பில் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்.”
– இவ்வாறு காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
“காலத்தை கடத்திக் கொண்டிருக்காமல் ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து காணாமல்போனோரின் உறவினர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். காணாமல்போனோருக்குப் பதிலளிப்பதற்கான கடப்பாட்டை அரசு  புறக்கணித்து செயற்பட முடியாது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“காணாமல்போனோரின் உறவினர்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகள், வேதனைக்குரியவையாகும். அந்த மக்களின் துயரங்களுக்கு விடிவுகாண வேண்டியது அவசியம். மேலும் காலத்தை கடத்திக்கொண்டிருக்காமல் ஒரு பொறிமுறையை அவசரமாக முன்னெடுக்கவேண்டியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளமை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மெக்ஸ்வல் பரணமகம இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“நாம் எமது ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை நடத்தியபோது ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் வந்தன. அந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக எமது ஆணைக்குழுவானது ஒரு விசாரணைக்குழுவை நியமித்தது. அந்த விசாரணைக்குழு பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணைகளை நடத்தியது.
எனினும், எமக்கு கால அவகாசம் போதுமானதாக இல்லாமையினால் இந்த செயற்பாட்டை பூரணப்படுத்த முடியவில்லை. எமது பரிந்துரைகளில் நாம் பல்வேறு முக்கியமான விடயங்களை முன்வைத்திருந்தோம். அதில் காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்றும் பரிந்துரை செய்திருந்தோம்.
தற்போது காணாமல்போனோர் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன. எனினும், ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து இந்த காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
காணாமல்போயிருப்போர் எமது நாட்டின் பிரஜைகள். எனவே, அந்த விடயத்தில் அரசின் பொறுப்பைப் புறக்கணித்து செயற்பட முடியாது. காணாமல்போனோருக்கு என்ன நடந்தது?  அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்பது தொடர்பில் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்.
இந்தப் பொறுப்பிலிருந்து அரசு விலக முடியாது. மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஒருவர் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட குடும்பம் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும். ஆனால், காணாமல்போனோர் ஒருவர் தொடர்பில் இவ்வாறு எதுவும் செய்ய முடியாது. உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதுகூடத் தெரியாமல் உறவினர்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இது தொடர்பில் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். காணாமல்போனோர் விடயத்தில் அரசு என்ன செய்கின்றது என்பதை சர்வதேசமும் பார்த்துக்கொண்டிருக்கின்றது. மக்களின் வேதனையை உணர்ந்துகொள்ள வேண்டும். காணாமல்போன தமது உறவுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் இருப்பதானது கொடூரமான நிலையாகும். எனவே, ஒரு முறையான விசாரணை பொறிமுறை அவசியமாகும்.
அதனூடாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முன்வரவேண்டும். மாறாக இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து இழுத்தடித்துக்கொண்டு இருப்பது முறையானதல்ல. எமது ஆணைக்குழு முடியுமானவரை நடவடிக்கைகளை மேற்கொண்டது. எமக்கு ஆயிரக்கணக்கான எழுத்துமூல முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால், எமக்கு காலம் போதுமானதாக இருக்கவில்லை. இன்னும் ஒருவருடகாலம் எமக்கு வழங்கப்பட்டிருந்தால் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எம்மால் கண்டுபிடித்திருக்கலாம்” – என்று கூறியுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …