Wednesday , April 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பலாலி விமான நிலையத்திற்கு திடீர் முட்டுக்கட்டை

பலாலி விமான நிலையத்திற்கு திடீர் முட்டுக்கட்டை

பலாலி விமான நிலையத்தை விஸ்தரித்து மீள இயங்க வைக்கும் தீவிர முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு தரப்பினரிடமிருந்து திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரியொருவர் இது குறித்த தகவல்களை தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

விமானநிலைய புனரமைப்பு திட்டத்தில் புதிதாக ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையால், இந்த திட்டத்தை முன்னெடுக்கவிருந்த இந்தியாவும் அதிருப்தியில் உள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.

பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக, சர்வதேச தரத்தில் புனரமைக்கும் திட்டம் கொள்கையளவில் வகுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான நிதி உதவியை இந்தியா வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக 2000 மில்லியன் ரூபா செலவில், 72 ஆசனங்களை கொண்ட விமானங்கள் சேவையில் ஈடுபடத்தக்கதாக விமான நிலையத்தை புனரமைப்பதென்றும், இந்திய தேர்தலின் பின்னர் அமையும் அரசுடன் பேசி, சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கும் பணியை ஆரம்பிப்பதென்றும், பிரதமர் தலைமையில் நடந்த வடக்கு கிழக்கு துரித அபிவிருத்தி செயலணியில் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. ஜனாதிபதி தலைமையிலான வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியிலும் இதேவிதமான உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

இராணும், விமானப்படை, சிவில் விமானசேவை அதிகாரிகளை உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில், தற்போதுள்ள ஓடதளத்திற்கு அண்மையாக உள்ள இரண்டு கட்டடங்களை, குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் சுங்கத்திணைக்கள செயற்பாடுகளிற்கு பாவிப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டடங்களை அடிப்படையாக வைத்தே, விமான நிலைய விஸ்தரிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது அந்த கட்டடங்களை வழங்க பாதுகாப்பு தரப்பு மறுத்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தரப்பின் நிலைப்பாடு இந்திய தூதரக அதிகாரிகளிற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விமான நிலைய பயன்பாட்டிற்கு தேவையான கட்டடங்களை மயிலிட்டி பக்கமாக அமைக்கும்படி பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

விமான நிலைய புனரமைப்பு பணிகளை துரிதகதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த போதும், தற்போதைய புதிய நிலைமையினால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv