Thursday , April 25 2024
Home / சமையல் குறிப்புகள் / பொங்கல் ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல் மற்றும் மெது வடை செய்ய…!

பொங்கல் ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல் மற்றும் மெது வடை செய்ய…!

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்
பொடித்த வெல்லம் – கால் கப்
பால் – ஒரு லிட்டர்
பயத்தம்பருப்பு – கால் கப்
நெய் – கால் கப்
முந்திரி – 10
திராட்சை – 25 கிராம்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை: அரிசி, பருப்பை சுத்தம் செய்து பாலுடன் சேர்த்து குழைய வேக வைக்கவும் (அல்லது பால் நன்கு பொங்கி வரும்போது, சுத்தம் செய்த அரிசி, பருப்பை சேர்த்து குழைய வேக வைக்கலாம்). நன்கு வெந்து வரும்போது பொடித்த வெல்லத்தைப் போட்டு கலக்கவும். வெல்லம் கரைந்து நன்றாக கலந்து பச்சை வாசனை போனதும், நெய்விட்டு அடிபிடிக்காது கிளறி இறக்கவும். முந்திரி, திராட்சையை நெய்விட்டு வறுத்து, சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கவும். இதில் ஏலக்காய்த்தூள் போட்டு கலக்கவும். விருப்பப்பட்டால், சிறிதளவு பச்சைக்கற்பூர பொடி சேர்க்கலாம்.
2. மெதுவடை செய்ய:

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 250 கிராம்
பச்சை மிளகாய் – 10 கிராம்
இஞ்சி – ஒரு துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 500 கிராம்
பெருங்காயம் – ஒரு கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு பருப்பைக் களைந்து தண்ணீரை நன்றாக வடித்து கல் உரல் அல்லது கிரைண்டரில் போட்டு கெட்டியாகவும் மை போன்றும் அரைத்துக் கொள்ளவும்.
கடைசியில் உப்பு, பெருங்காயத்தைப் போட்டு ஒரு சுற்று சுற்றி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் போடுங்கள். கறிவேப்பிலையை சிறுசிறு துண்டுகளாகக் கிள்ளிப் போட்டு மாவைக் கலந்து கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.

ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் விரல்களை நனைத்து மாவை சிறிது எடுத்து உருண்டையாக்கி, பிறகு தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட வேண்டும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் வடை மாவை எடுத்து அதில் போடுங்கள். எச்சரிக்கையாக மாவை எண்ணெயில் போட வேண்டும். கையைத் தண்ணீரில் நனைக்காமல் மாவை எடுத்தால் அது கையை விட்டு வராது. அதே சமயம் எண்ணெயில் போடும் போது சூடான எண்ணெய் உங்கள் மீது தெறிக்கும் அபாயமும் உண்டு.

வடை ஒரு பக்கம் சிவந்ததும் கரண்டியால் திருப்பி விட்டு மறு பக்கமும் சிவந்து வந்ததும் எடுத்து எண்ணெயை வடித்து எடுத்தால், சுவையான மெதுவடை தயார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv