Monday , October 21 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விலகிச்செல்ல வேண்டுமென்கிறார் மஹிந்தர்! – ஐ.நா. ஆணையாளரின் கூற்றை ஏற்க மாட்டோம்!

விலகிச்செல்ல வேண்டுமென்கிறார் மஹிந்தர்! – ஐ.நா. ஆணையாளரின் கூற்றை ஏற்க மாட்டோம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐ.நா. ஆணையாளர் கூறும் சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே திலக் மாரப்பன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

”எமது நாட்டின் இறைமை, தன்னாதிக்கம் என்பவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் தொடர்ச்சியாக செயற்பட்டோம். எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ளவும், எமது இறைமைக்கு ஏற்ப பிரஜைகளின் மனித உரிமையை பாதுகாக்கவும் பொறுப்புடன் செயற்பட்டோம்.

கடந்த காலத்தில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அந்நிலையை மாற்றியமைத்தோம். மிலேனியம் கோப்பரேசன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்கின்றோம்.

எமது நாட்டு படைவீரர்கள், சர்வதேச படைகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்டனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை விடயம் தொடர்பாக ஐ.நா.வில் விவாதம் இடம்பெறவுள்ளது. ஐ.நா. ஆணையாளர் கூறும் சகல விடயங்களையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இராணுவம் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்படவில்லையென ஐ.நா. ஆணையாளர் கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்பாடுகளுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு வருட கால அவகாசம் கோரினோம். அக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விடயங்களை நாம் காட்டியுள்ளோம். அவ்வாறே இம்முறையும் கால அவகாசத்தைக் கோரியுள்ளோம்” என்றார்.

ஐ.நா. பிரேரணையிலிருந்து விலகிச்செல்ல வேண்டுமென்கிறார் மஹிந்தர்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில், வாய்மொழிமூல கேள்விக்கான பதில் நேரத்தில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படவுள்ள பிரேரணையானது, இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை அமைக்கவும் ஐ.நா. கிளை அலுவலகத்தை நிறுவவும் வழிவகுப்பதாய் அமையுமென மஹிந்த இதன்போது குறிப்பிட்டார்.

தாருஸ்மன் அறிக்கை மற்றும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையின் உள்ளடக்கங்கள் பொய்யான விடயங்கள் என்றும் இவற்றிலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அவ்வாறு இல்லாவிட்டால் மனித உரிமைகளின் மறைவில் இலங்கை நீதிமன்றம் கொச்சைப்படுத்தப்படும் என்றும், கலப்பு நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், அவற்றை தடுக்கும் வகையில் அரசாங்கத்திடம் பிரேரணை முன்வைப்பதாகவும், அதற்கு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த சர்வதேச தலையீட்டுடனான கலப்பு நீதிமன்றத்தை இலங்கையில் அமைக்க வேண்டுமென ஐ.நா. பிரேரணையில் பிரேரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினர் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த பிரேரணையை வலுவிழக்கச் செய்யுமாறு மஹிந்த வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு ! ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தமிழ்த் தேசியக் …

error: Content is protected!