Thursday , March 22 2018
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து

இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து

இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடர்களை கண்டு அஞ்சாமல் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அனைத்து மகளிருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் நலனுக்கு எண்ணிலடங்கா திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தி வந்தார்.

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு மகளிர் நலத்திட்டங்களை சீரிய முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தியது, உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் அம்மா இருசக்கர வாகனத்திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களை மகளிர் மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் கோயம்புத்தூர் மாநகரமும், பெண்களுக்கான பாதுகாப்பான பெருநகரங்களின் பட்டியலில் சென்னை பெருநகரமும் இடம்பெற்றிருப்பது, பெண்களின் பாதுகாப்பில் ஜெயலலிதாவின் அரசு மிகுந்த அக்கறை கொண்ட அரசு என்பதை மீண்டும் மெய்ப்பித்து இருக்கின்றது.

மேலும், பெண் உரிமை, பாலியல் வன்கொடுமை மற்றும் பணியிடங்களில் உருவாகும் அசாதாரண நிலை குறித்து புகார் தெரிவிக்க, பெண்களுக்காக பிரத்யேகமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இணைய தளம் மூலம் புகார் பெட்டி ஏற்படுத்தப்பட்டு சமூக நலத்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ உதவி, சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிட மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கான சமூக நலத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

தங்கள் வாழ்வில் எதிர்வரும் இடர்களை அஞ்சாமல் உறுதியுடன் எதிர்கொண்டு, அவற்றை வெற்றிப் படிகளாக்கி, இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒருமுறை எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.

Check Also

காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்

இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட இடங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். …

error: Content is protected!