Friday , March 29 2024
Home / சிறப்பு கட்டுரைகள் / மர்மம் நிறைந்த மார்ச்

மர்மம் நிறைந்த மார்ச்

மர்மம் நிறைந்த மார்ச்

பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இலங்கை அரசின் நகர்வுகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளதா அல்லது முன்னைய அரசுகள்போன்று பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இருந்து இலங்கை அரசு நழுவப் போகின்றதா என விடை தெரியாத கேள்விகள் பல கோணங்களில் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், நல்லாட்சி அரசு தனது இராஜதந்திரத்தின் மூலம் மனிதவுரிமைகள் பேரவையில் தனக்குச் சாதகமான ஒரு நிலைøயை தோற்றுவித்துக்கொள்ள பல்வேறு பிராச்சித்தங்களை மேற்கொண்டுள்ளமை வெளிப்படையாக விளங்குகின்றது.

2015ஆம் ஆண்டு அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு எதிர்வரும் மார்ச் மாதம் கூடும் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளது. மார்ச் மாதம் 24ஆம் திகதிதான் இலங்கை எமது நிலைப்பாட்டை அறிவிக்கின்றது.

ஆனால், வழமைபோன்று அல்லாது இம்முறை இலங்கை அரசுக்கு எவ்வாறு இந்தக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றதோ அதேபோல் தமிழ் மக்களுக்கு இக்கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் காணப்படுகிறது. இம்முறை கூட்டத் தொடர்பில் மனிதவுரிமைகள் பேரவை இலங்கை அரசுக்கு ஆணித்தரமான அழுத்தங்களை கொடுக்காவிடின் ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட பொறுப்புக்கூறல் என்ற விடயம் அடியோடு மாறிவிடும் என்பதுடன், இனிவரும் காலங்களில் இலங்கை அரசு எடுக்கும் தீர்மானங்கள்தான் இங்கு நடைமுறைக்கு வரும் என்பதை அண்மைய செயற்பாடுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

முன்னதாக கலப்பு நீதிமன்றம் குறித்த ஜெனிவா அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கையின் உயர் தரப்பிடம் விளக்கம் கோரப்பட்டுதான் முன்மொழியப்பட்டது. அப்போது கலப்பு நீதிப் பொறிமுறையை ஏற்றுக்கொண்டிருந்த ஜனாதிபதி அதன்பின்னர் கலப்பு பொறிமுறை தேவையா? எனப் பலமுறை மறைமுக சமிஞ்சைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனியின் இலங்கை விஜயத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் கலப்பு நீதின்றம் இலங்கைக்கு அவசியமில்லை, உள்ளக நீதிபதிகளை உள்ளடக்கிய முற்றிலும் உள்நாட்டு பொறிமுறையே நடைபெறுமென வெளிப்படையாகத் தெரிவித்தார்.

அதன் பின்னர் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹுசைனின் விஜயத்தின் பின்னர் ஆணையாளர் உள்ளக விசாரணைக்கு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தினார் எனக் கூறி முற்றிலும் உள்ளக விசாரணைதான் இடம்பெறும் என்று ஆணித்தரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச தரப்பினர் வலியுறுத்தின. அதேபோல், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு அமைச்சரவை மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் ராஜித சேனாரட்ன, உள்ளக விசாரணைக்கு மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் இணக்கம் தெரிவித்துவிட்டார் போர்க்குற்றம் தொடர்பில் முற்றிலும் உள்ளக விசாரணையே இடம்பெறும் எனக் கூறியிருந்தார்.

அந்தக் கருத்தை நிராகரிப்பதாக மனிதவுரிமைகள் பேரவையின் அலுவலகம் செய்தி வெளியிட்டிருந்தது. என்றாலும், ஒரு சில விடயங்களில் இலங்கை அரசுக்கு மனிதவுரிமைகள் பேரவை சாதகமான சமிஞ்சைகளை வெளிப்படுத்தியதன் விளைவே என்று, பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இருந்து இலங்கை நழுவப் பார்க்கின்றது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமால் போனோர் தொடர்பிலான அலுவகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு நாட்கள் மாத்திரம் நகர்ந்த வண்ணம் உள்ளன. அதனை நடைமுறைப்படுத்த அரசு தீவிர ஆர்வம் காட்டவில்லை. இந்த விடயத்தை சிவில் அமைப்புகளும் விமர்சனம் செய்துள்ளன.

சர்வதேச அரசியல் ஐ.நாவை ஆட்டிப்படைப்பதால் ஐ.நா. இன்று அதன் உண்மைத்துவத்தை இழந்துவரும் நிலையை மறுக்க முடியாது. இலங்கையில் இடம்பெற்ற ஒரு ஆட்சிமாற்றத்தின் விளைவாக இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதவுரிமை மீறல் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையை விடுத்து கலப்புப் பொறிமுறைக்கு ஐ.நா. ஆதரவுகொடுத்தது. ஆனால், நல்லாட்சி அரசு மனிதவுரிமைகள் உறுதிப்படுத்தப்படும், பொறுப்புக்கூறப்படும் என்று கூறிக்கொண்டு ஆட்சிப்பீடமேறியபோதும் நல்லாட்சியை ஏற்படுத்த சில முயச்சிகளை எடுத்திருந்தாலும் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இருந்து நழுவிக்கொள்ளவே சர்வதேச இராஜதந்திர உறவுகளை இலங்கை வலுப்படுத்தி வருகின்றது.

இலங்கையில் நிலைமாற்றுக்கால நீதிப்பொறிமை தொடர்பில் ஆலோசனை வழங்க ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனால் நியமிக்கப்பட்ட ஐ.நாவின் துறைசார் நிபுணத்துவம் பெற்ற பப்லோ டி கிரிடிக் போன்றவர்கள் நடுநிலைத் தன்மையில் நிலைமாற்றுக்கால நீதிப் பொறிமுறைக்கு ஆலோசனை வழங்கவில்லை என்று அண்மை நாட்களாக சிவில் அமைப்புகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இவர் கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கையில் ஸ்தாபிக்க அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட வரலாறுகள் உலகிற்கு நன்கு பரீட்சியமுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுகள் லத்தின் அமெரிக்க நாடுகளில் 1980, 90களில் அமைக்கப்பட்ட போதும் அங்கு நிகழ்த்தப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகளுக்கு உண்மை ஆணைக்குழுக்கள் தீர்வை வழங்கியிருக்கவில்லை. அதேபோல், கறுப்பினத்தவர்கள் தென்னாபிரிக்காவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நிலைமாற்றுக்கால நீதிப்பொறிமுறையின் நகர்வுகளுக்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தனர். ஆனால், இறுதியில் அங்கு எண்ண நடந்தது. கடந்தகால சம்பவங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்பது கோடிட்டு காட்டப்பட வேண்டிய விடயமாகவுள்ளது.

அவ்வாறே இலங்கையில் ஐ.நா. தீர்மானத்தில் நிறைவேறப்பட்ட கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்காது முதலில் உண்மை ஆணைக்குழுவை அமைத்து பொறுப்புக்கூறலில் இருந்து விலகிக்கொள்ள அரசு காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பிடமும் இலங்கை அரசு இதனைதான் வலியுறுத்தி வருகிறது.

ஐ.நா. தீர்மானத்தில் இருந்து முற்றாக எங்களை விடுவித்துவிடுங்கள் என்று டிரம்பிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். அவர் விரைவில் அமெரிக்காவுக்கான விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் வெகுவிரைவில் ஆசிய வெளிவிவகாரக் கொள்கைகளை அமெரிக்கா மாற்றிக்கொள்ளாது. இதனை அமெரிக்காவின் முன்னைய அரசுகளின் ஆட்சியில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், டிரம்பின் வெளிவிவகாரக் கொள்கையின் பிரகாரம் இலங்கை அரசுக்கு இனிவரும் காலங்களில் எவ்வித அழுத்தமும் கொடுக்க போவதில்லை என்று புலம்பெயர் மக்களின் ஆயுவின் கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, தற்போது இருக்கும் அழுத்தமான சூழலில் மற்றொரு பிரேரணை ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நிறைவேற்றப்படாவிடின் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுதல், உண்மையை கண்டறிதல் என்ற பதங்கள் இலங்கையில் தோல்வி கண்டனவாக மாறிவிடும் என்று சர்வதேச மனிதவுரிமை ஆர்வலர்கள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசு ஆதரவு வழங்கியுள்ள சூழலில் அதனை நடைமுறைப்படுத்த அரச தரப்பில் தீர்க்கமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில் ஐ.நாவும் இலங்கையின் கோரிக்கைக்கு இணங்குமாயின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகிவிடும். ஐ.நாவில் மனிதவுரிமைகள் பேரவை மட்டுமே தற்போது இலங்கை விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அதன் பார்வையும் இலங்கையின் மனிதவுரிமை விவகாரத்தில் இருந்து விலக்களிக்கபட்டால் ஐ.நாவில் இருந்து இலங்கை முற்றாக விடுபட்டுவிடும். அதன் பின்னர் மீண்டுமொரு பிரேணை கொண்டுவந்து இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுப்படுத்துவது என்பது வெறும் வாய்ப்பேச்சாகவே இருக்கும்.

காரணம் இலங்கை விவகாரத்தை கையில் எடுத்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இன்று ஆட்சிமாற்றங்கள் அரங்கேறியுள்ளன. அத்துடன், சர்வதேச நாடுகளில் தலையீடற்ற வெளிவிவகாரக் கொள்கையை இந்த நாடுகள் பின்பற்ற தயாராகி வருகின்றன. எனவே, ஐ.நாவில் கிடப்பில் போட்டப்பட்ட மனிதவுரிமை விவகாரங்களின் ஒன்றாக இலங்கையின் விவகாரமும் மாறிவிடும்.

தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டுள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது. சர்வதேச அழுத்தம் இனி இலங்கைக்கு இருக்கப்போவதில்லை என்பது நிதர்சனம். அதேபோல் ஐ.நாவில் மற்றுமொரு பிரேரணையை மேற்கத்தேய நாடுகள் கொண்டுவரும் என்று எண்ணுவது இன்றைய சூழலில் ஒரு கனவுதான். காணாமல் ஆக்கப்டோரின் விடயத்திலேயே அரசு நடுநிலைத்தன்மையை வெளிகாட்டாவிடின் எவ்வாறு பொறுப்புக்கூறலை கையில் எடுக்கும் என்று தமிழ் மக்கள் எண்ண முடியும்.

இணக்க அரசியல் என்று இன்று தமிழ் அரசியல் தலைமைகளும் அரசுடன் கைகோர்த்துச் செயற்படுகின்றனர். இதில் தமிழர்களுக்கு வெற்றிவாகை கிடைக்குமென எத்தகைய உத்தரவாதம் உள்ளது? கடந்த கால வரலாறுகளையும், அனுபவத்தையும் நாம் எம்முன் வைத்துக்கொண்டுதான் இந்த அரசுடன் கைக்கோர்த்துச் செயற்படுகின்றோம்.

இணக்கப்பாட்டுடன் செயற்படும் பொறுப்புக்கூறலுக்கு அரசு எடுத்துள்ள முயச்சிதான் என்ன?
இராணுவத்தினர் குற்றமிழைத்திருந்தால் தண்டனை வழங்கப்படும் என்று அரசு கூறிவருகிறது. ஆனால், அது உள்ளகப் பொறிமுறையில்தான் என்கிறது. உள்ளகப் பொறிமுறையில்தான் முன்னாள் அரசின் ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் வழக்கு விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறுதான் உள்ளகப் பொறிமுறையொன்று வருமாயின் 10வருடங்கள் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பளிக்கப்படும்.

எனவே, தமிழ் தரப்பு ஒரு தீர்க்கமான காலகட்டத்திலும், முக்கியமான முடிவுகளையும் எடுக்கவேண்டிய காலகட்டத்திலும் வாழ்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. புதிய அரசமைப்பு சமஷ்டி முறையில் அமைய வேண்டுமென தமிழ் தரப்பு வலியுறுத்திவரும் அதேவேளை, ஒற்றையாட்சி என்ற வரைவிலக்கணத்தில் இருந்துகூட ஒரு சொல்லை மாற்ற மாட்டோமென அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இவ்வாறு இணக்க அரசியலில் தமிழ் தரப்பால் சாதிக்க முடியாமலே உள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய இறைமையின் அடிப்படையில் தமிழ் தரப்பு எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் ஒரு தெளிவுடனும், வெளிப்படையாகவும் செயற்பட்டே ஆகவேண்டும்.

இல்லாவிடின் மக்களின் அறவழிப்போராட்டம் காணாமல் போனோருக்காகக் தொடரும் போராட்டம் போன்று நாளுக்குநாள் வலுவடையும் என்பதில் ஐயமில்லை.

எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை எத்தகைய அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளது என்று அனுமானிக்க முடியாதுள்ளது. அதேபோல் தமிழ் தரப்பு அதற்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது அல்லது அதனை எவ்வாறு கையாளப் போகின்றது என்று இதுவரை உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை எனப் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்த ஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு மர்மப் பொருளாகவே இதுவரை உள்ளது. மனிதவுரிமைகள் பேரவை எதனை வலியுறுத்தப் போகிறது? பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்குமா? பொறுப்புக்கூறல் என்ற விடயம் மீண்டும் புத்துயிர் பெறுமா? மனிதரிமைகள் பேரவை ஏதும் முக்கிய முடிவு எடுக்குமா? எனப் பல்வேறு கேள்விகளுடன் நாட்கள் நகர்ந்த வண்ணமே உள்ளன.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites