Friday , April 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நீண்ட நாட்களிற்குப் பின் நேருக்கு நேர் மைத்திரி – சந்திரிக்கா!!

நீண்ட நாட்களிற்குப் பின் நேருக்கு நேர் மைத்திரி – சந்திரிக்கா!!

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோதும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

சந்திரிகாவின் தந்தையாரும் இலங்கையின் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்கவின் 120 ஆவது பிறந்த தின நிகழ்வு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான இவரது இன்றைய பிறந்த தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் கலந்து கொண்டனர்.

ஆனாலும் இந்த நிகழ்வில் குறித்த இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சந்திரிகா உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாமே எனவும், தம்மிடம்தான் உண்மையான கொள்கைகள் உண்டு எனவும் கூறினார்.

அதே நேரம் பண்டார நாயக்கவின் கொள்கைகளை இங்கு யார்தான் பின்பற்றுகிறார்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.

சந்திரிகாவின் இந்த திடீர் கருத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முகத்தைப் பொத்தி அறைந்தது போல் இருந்ததாகவும் அவரது ஆதரவாளர்களிடையே சற்று அதிர்ச்சியான மனநிலை இருந்ததாகவும் அவதானிகள் கூறுகின்றனர்.

கடந்த ஆட்சிக் குழப்ப நேரத்திலிருந்து இன்றுவரை அரசியல் குறித்த கருத்துக்கள் எதையுமே கூறிவராத சந்திரிகா முதன்முறையாக இன்று வாய்திறந்து பேசியமை சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிமுகப்படுத்தி தேர்தலின் நிறுத்தி அவரை வெல்ல வைத்ததில் முக்கிய பங்கு சந்திரிகாவுக்கும் இருக்கின்றது.

மஹிந்தவிடமிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மீட்பதுடன் அவரை ஆட்சியிலிருந்து விரட்டவேண்டும் என்பதற்காகவே சந்திரிகா ஜனாதிபதி மைத்திரியை பொதுவேட்பாளராக்க பாடுபட்டார் என்று அப்போது கூறப்பட்டது.

ஆனாலும் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் நாளுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திர்பால சிறிசேனமீது சந்திரிகா ஆழ்ந்த வெறுப்பில் இருப்பதாக உள்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதன் வெளிப்பாடே சந்திரிகாவின் இன்றைய கூற்று அமைந்துள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv