Friday , April 19 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் அமைச்சர் மீது நடைபெற்றுள்ள இந்த வருமான வரிச்சோதனையை வரவேற்கிறேன்.

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட அமைச்சரின் இலாகாவின் கீழ்வரும் அரசு அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடை பெற்று வருகிறது. ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகப் பெரிய தலைகுனிவை சந்தித்து வருகிறது என்பதற்கு இந்த வருமான வரித்துறை சோதனைகள் எல்லாம் சாட்சியமாக அமைந்துள்ளன.
அதிமுக ஆட்சிக்கு வருமான வரித்துறை சோதனை புதிதல்ல. அரவக்குறிச்சி தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து மின்சாரத் துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் வீட்டிலும், சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த சைதை துரைசாமி வீட்டிலும் வரு மான வரிச்சோதனை நடை பெற்றது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, பன்னீர் செல்வம் முதல்-அமைச்சாரக இருந்த போது தமிழகத்தின் தன்மானச் சின்னமான தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டது. குறிப்பாக கோட்டையில் உள்ள தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் அலுவலகத் திலேயே வருமான வரித் துறை சோதனை செய்யப் பட்டு தமிழக நிர்வாக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி வைக்கப்பட்டது. பிறகு மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

இந்த வருமானவரித்துறை சோதனைகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இப்போது அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் தலைவராக இருக்கும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் நின்று பத்திரிக்கைகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் முன்னுதாரணமே இல்லாத வகையில் மத்திய அரசுக்கே சவால் விட்டும் இன்றைக்கு எவ்வித மேல் நடவடிக்கையும் இன்றி மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இது போன்றதொரு சூழ்நிலையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஊழல் செய்து கணக்கில் காட்டாத வருமானத்தை வைத்துள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த ஊழல் ஏதோ திடீரென்று நடைபெற்றது அல்ல. கடந்த ஐந்து வருடமாக அதிமுக ஆட்சியிலும் நடந்தது. இப்போது மீண்டும் வந்திருக்கின்ற அதிமுக ஆட்சியிலும் நடந்து கொண்டிருக்கிறது.
அமைச்சர்கள் எல்லாம் ஒவ்வொரு டெண்டராக அரசு கஜானாவை காலி செய்து கொண்டிருக்கிறார்கள். “எதிலும் கமிஷன் எங்கும் ஊழல்” என்பது இப்போது ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் நிற்கும் இரு அணிகளின் முழக்கமாக இருந்ததை யாரும் மறந்து விட முடியாது. எல்.ஈ.டி. விளக்குகள் வாங்குவதில் ஊழல் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றமே தடை விதித்துள்ளது.

ஆகவே இப்போது நடக்கின்ற வருமான வரித்துறை சோதனைகள் எல்லாம் மிகவும் தாமதமான நடவடிக்கை என்பதை விட, ஆர்.கே. நகர் தேர்தல் நேரத்தில் நடக்கும் சோதனையின் வியூகம் என்ன என்பதில் சந்தேகம் எழுவதை தடுக்க முடியாது. இந்த வருமான வரி சோதனை, இதற்கு முன்பு நடைபெற்ற சோதனைகள் பற்றிய உரிய விளக்கத்தை மத்திய அரசுதான் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஏனென்றால் இதுவரை வருமான வரித்துறை சோதனைக்குள்ளான கரூர் அன்புநாதன், நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, ராம்மோகன்ராவ் உள்ளிட்ட அனைவர் மீதும் எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வருமான வரித்துறை சோதனைகள் ஏதோ ஜெயலலிதாவின் மரணம் போலவே “மர்மமாக” இன்னும் நீடிக்கிறது.

இன்றைக்கு சுகாதாரத் துறை செயலாளர் வரை நீளும் வருமான வரித்துறை சோதனை மணல் மாபியா சேகர் ரெட்டி விஷயத்தில் ஏன் பொதுப்பணித்துறை அமைச்சர், செயலாளர்கள் வரை நீளவில்லை என்ற நியாயமான சந்தேகமும் மக்களுக்கு எழுகிறது. மக்களின் வரிப்பணத்தை சூறையாடி, மக்களுக்கான திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கூட ஏற்படுத்தாமல் ஊழல் செய்தால் போதும் என்ற ஒரே லட்சியத்துடன் ஒட்டு மொத்த அதிமுக ஆட்சியும், அமைச்சர்களும் செயல்பட்டது இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இதற்கு பல நேர்மை யான ஐ.ஏ.எஸ் அதிகாரி களும் பலியாகி விட்டது உள்ளபடியே வருத்தமளிக் கிறது. மிகச்சிறந்த தமிழக அரசின் நிர்வாகம் இப்படி ஊழல் அமைச்சர்களால் இன்று நிலை குலைந்து இந்திய மாநிலங்களில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தருகிறதே என்பதை நினைத்துப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இதற்கிடையில் வருமான வரித்துறை சோத னைக்கு உள்ளான அமைச்சர் வீட்டிற்கு மற்ற அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் சென்று ஆதரவு தெரிவிப்பதும், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பிரச்சினை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது. வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்யத் தவறினால் பொறுப்பு ஆளுநர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
“சில அமைச்சர்கள் வீட்டில் வருமான வரித்துறை நடத்தினோம்” என்பதோடு வருமான வரித்துறை நின்று விடாமல், கடந்த ஆறு வருடங்களில் அம்மையார் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதலமைச்சர்களாக இருந்தவர்கள், அவரது மறைவிற்கு முன்பு அமைச் சரவையில் இரண்டாவது அந்தஸ்தில் இருந்து ஊழலுக்கு துணை போன அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அதிமுக அமைச்சர்களின் ஊழல் சாம்ராஜ்யத்திற்கும் முடிவு கட்டும் வகையில் வருமான வரித்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …